செய்திகள்
தத்தனூர் நடுவெளி கிராமத்தில் ஜல்லிக்கற்கள் நிரவப்பட்டுள்ள சாலையை படத்தில் காணலாம்

கிடப்பில் போடப்பட்ட பணி: ஜல்லிக்கற்கள் நிரவப்பட்ட சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

Published On 2021-02-17 16:35 IST   |   Update On 2021-02-17 16:35:00 IST
ஜல்லிக்கற்கள் நிரவப்பட்ட நிலையில் சாலை பணி கிடப்பில் போடப்பட்டதால், அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் நடுவெளி கிராமத்தில் ஏரிக்கரை அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. இதில் தத்தனூர் நடுவெளியில் உள்ள ஏரிக்கரையில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சாலை முழுவதும் ஜல்லிக்கற்களால் நிரவப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னர் சாலைப்பணி நடைபெறவில்லை.

இதனால் அந்த சாலை வழியாக சென்று வருவதற்கு சிரமம் ஏற்படுவதால், காலை, மாலை வேளைகளில் பொட்டக்கொல்லை அரசு மேல்நிலைப்பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடிவதில்லை.

பருக்கல், வளவெட்டிகுப்பம் ஆகிய ஊர்களில் இருந்து நடுவெளி ஏரிக்கரை சாலையில் வரும் வாகனங்கள் பஞ்சராகி விடுகின்றன. மேலும் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களின் கால்களில் ஜல்லிக்கற்கள் குத்தி காயம் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News