செய்திகள்
தேர்வு கட்டணத்தை மீண்டும் கட்ட வலியுறுத்தியதால் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தேர்வு கட்டணத்தை மீண்டும் கட்ட வலியுறுத்தியதால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலைநகர்:
சிதம்பரம் சி.முட்லூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. இதற்கிடையே கல்லூரியில் தேர்வு எழுத கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும், தேர்வு எழுதாமலேயே, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.
அந்த வகையில் திறக்கப்பட்ட சிதம்பரம் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் மீண்டும் தேர்வு கட்டணத்தை செலுத்தி, தேர்வை எழுத வேண்டுமென கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ-மாணவிகள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் தேர்வு எழுத தாங்கள் தயாராக உள்ளதாகவும், மீண்டும் தேர்வு எழுத கட்டணம் செலுத்த மாட்டோம் எனவும் கூறி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டமானது காலை 11 மணி முதல் மதியம் 12.45 வரை நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தேர்வுக்கட்டணத்தை மீண்டும் கட்ட வற்புறுத்தினால், தாங்கள் அடுத்த கட்டமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என கல்லூரி நிர்வாகத்தினரிடம் கூறிவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல் காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் மீண்டும் தேர்வு கட்டணம் செலுத்த வலியுறுத்தியதை கண்டித்து நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.