செய்திகள்
பணியிட மாற்றம்

முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் மீது தாக்குதல்- பெண் கிராம நிர்வாக அலுவலர் பணியிட மாற்றம்

Published On 2021-02-10 15:06 IST   |   Update On 2021-02-10 15:06:00 IST
முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக பெண் கிராம நிர்வாக அலுவலரை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து புதுக்கோட்டை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானபிரகாசம், முன்னாள் ஊராட்சி தலைவர். தற்போது அவரது மனைவி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஞானபிரகாசம் அப்பகுதியில் சென்ற போது மர்மநபர்கள் சிலர் அவரை வழிமறித்து சரமாரி தாக்கியதோடு, அரிவாளால் தலையில் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஞானபிரகாசம் சம்பட்டிவிடுதி போலீசில் புகார் செய்தார். புகாரில் வடவாளம் கிராம நிர்வாக அலுவலர் அம்பிகா தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக தெரிவித்து இருந்தார்.

வடவாளம் கிராம நிர்வாக அதிகாரி அம்பிகா பணிகளை சரிவர செய்யவில்லை என்று ஞானபிரகாசம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்துள்ளார். இது தொடர்பான பிரச்சனையில் ஞானபிரகாசம் தாக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனிடையே ஞானபிரகாசத்தின் ஆதரவாளர்கள் இச்சடி புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆலங்குடி டி.எஸ்.பி. முத்துராஜா தலைமையிலான போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், கிராம நிர்வாக அதிகாரி அம்பிகா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

புதுக்கோட்டை தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வி.ஏ.ஓ. அம்பிகா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்தநிலையில் வடவாளம் கிராம நிர்வாக அதிகாரி அம்பிகா, கந்தர்வக்கோட்டை தாலுகா கோமாபுரம் கிராம நிர்வாக அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி பிறப்பித்துள்ளார்.

Similar News