செய்திகள்
ஆலோசனை கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி பேசிய போது எடுத்த படம்.

பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேச்சு

Published On 2021-02-07 11:15 GMT   |   Update On 2021-02-07 11:15 GMT
பள்ளிகளில் கொரோனா தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:

நாளை (திங்கட்கிழமை) 9, 11-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி உயர்நிலை மற்றும் மேல்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வு கூட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி பேசியதாவது:-

பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப சமூக இடைவெளியை பின்பற்ற போதிய வகுப்பு அறைகளும், ஆசிரியர்களும் இருப்பின் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை முழுவேளையாக பள்ளி இயங்கும்.

சமூக இடைவெளியைப் பின்பற்றும் போது மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக சில வகுப்பறைகள் மட்டும் தேவைப்படும். அப்போது, பள்ளியில் உள்ள ஆய்வகம், நூலகம், கூட்ட அரங்கம் போன்றவைகளை பயன்படுத்தி 9 முதல் 12-ம் வகுப்பு வரை முழு வேளையாக பள்ளிகள் செயல்படும்.

சமூக இடைவெளியை பின்பற்றும் போது சில பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் தேவை இருக்குமானால் மாணவர்களை பெரிய வகுப்பறை, கூட்ட அரங்கம் போன்ற இடங்களில் அமரவைத்து வகுப்புகளை நடத்தலாம். சில பள்ளிகளில் வகுப்பு பிரிவுகளின் எண்ணிக்கை சமூக இடைவெளியை பின்பற்றுவதால் இருமடங்கு ஆகும் போது சில வகுப்புகள் அல்லது பிரிவுகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் செயல்படலாம்.

பள்ளிகளில் சில வகுப்புகள் அல்லது பிரிவுகள் 2 வேளையும் செயல்படலாம். அவ்வாறு செயல்படும்போது காலை வகுப்புகள் முடிந்தவுடன் முறையாக கிருமிநாசினி கொண்டு வகுப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு மதியம் வகுப்புகள் தொடங்க வேண்டும்.

9, 11-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும். மாணவர்களை தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு சம்பந்தமாக அரசின் அனைத்து வழிகாட்டி நெறிமுறைகளையும் பள்ளிகளில் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். வகுப்பறை முன்பு சோப்பு நீர் வைக்கப்பட வேண்டும்.

9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும். 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷிப்ட் முறை பயன்படுத்தக் கூடாது. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கணினி ஆய்வகம் மூலம் (ஹைடெக் லேப்) கற்றல் மதிப்பீட்டு தேர்வு நடைபெற்று வருகிறது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் ஹைடெக் ஆய்வகம், மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றின் வாயிலாக மாணவர்களுக்கான சோதனை தேர்வினை 100 சதவீதம் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் புதுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ராஜேந்திரன், அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் திராவிடச்செல்வம், இலுப்பூர் கல்வி மாவட்ட அலுவலர் சண்முகநாதன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் (மேல்நிலை) ஜீவானந்தம், கபிலன் (உயர்நிலை) மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News