செய்திகள்
கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே மறியலில் ஈடுபட்ட திருநங்கைகளை படத்தில் காணலாம்.

போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருநங்கைகள் திடீர் சாலை மறியல்

Published On 2021-01-26 03:57 GMT   |   Update On 2021-01-26 03:57 GMT
கடலூர் அருகே மணமக்களுக்கு ஆசி வழங்கி பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் திருநங்கைகள் தாக்கப்பட்டனர். அவர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருநங்கைகள் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:

கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் நேற்று 80-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தது. அப்போது திருமணம் முடிந்த ஒரு மணமக்களுக்கு 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஆசி வழங்கி பணம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு மணமக்கள் தரப்பினர் பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் திருநங்கைகளுக்கும், மணமக்கள் தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திருமணத்திற்கு வந்த சீருடை அணியாத போலீசார் ஒருவர் இது பற்றி அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.

பின்னர் போலீசார், அங்கிருந்த திருநங்கைகளை தாக்கி அனுப்பியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள், தங்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் புகார் தெரிவிக்க வந்தனர். தொடர்ந்து அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் எதிரே குண்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து திருநங்கைகள் கலெக்டர் அலுவலகம் உள்ளே செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும். மற்றவர்கள் வெளியே காத்திருங்கள் என்று கூறினர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News