செய்திகள்
கோப்புபடம்

வேப்பூர் அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் தர்ணா

Published On 2021-01-23 13:06 GMT   |   Update On 2021-01-23 13:06 GMT
வேப்பூர் அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூரில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். 50-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வேப்பூர் பகுதிக்கு போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் கல்லூரிக்கு சென்று வரும் மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

தாமதமாக வரும் பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு கல்லூரி நிர்வாகம் அரை நாள் ஆப்சென்ட் போடப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை கல்லூரி வளாகத்தில் முகப்பு வாசல் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தர்ணாவில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் மீனாவிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் பேராசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரியில் வகுப்புகள் நடைபெறவில்லை.
Tags:    

Similar News