செய்திகள்
கைதான லட்சுமி, சாந்தி

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறிக்க முயற்சி- 2 பெண்கள் கைது

Published On 2020-12-30 18:11 IST   |   Update On 2020-12-30 18:11:00 IST
இளையான்குடி அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறிக்க முயன்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
இளையான்குடி:

திண்டுக்கல் மாவட்டம், வேடம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமையா. இவருடைய மனைவி பார்வதி(வயது 61). இவர் தனது உறவினர்கள் அழகம்மாள்(59), முத்துலட்சுமி(58), ஆராயி(62) ஆகியோருடன் இளையான்குடி அருகே பாவாகுடி ஊருக்கு உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அரசு பஸ்சில் சென்றார். அந்த பஸ் சிவகங்கையில் இருந்து இளையான்குடி நோக்கி சென்று கொண்டு இருந்தது.

இந்த நிலையில் செங்குளம் என்ற இடத்தில் பஸ் சென்ற போது பஸ்சில் நின்றிருந்த 2 பெண்களில் ஒருவர் பார்வதியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச்சங்கிலியை நைசாக திருட முயன்றார். தனது கழுத்தில் இருந்து சங்கிலி நழுவதை பார்த்ததும் உடனே சுதாரித்த பார்வதி, சங்கிலியை பிடித்து கொண்டு திருடி, திருடி என சத்தம் போட்டார்.

இவரது சத்தத்தை கேட்டதும் அவரது உறவினர்கள் நகையை பறிக்க முயன்ற பெண்ணை அங்கிருந்து தப்பி செல்ல விடாமல் தடுத்து கொண்டனர். அவருடன் இருந்த மற்றொரு பெண்ணையும் சக பெண் பயணிகள் பிடித்து வைத்து கொண்டனர்.

உடனே பஸ் டிரைவர் வெங்கடேஷ் இளையான்குடி போலீஸ் நிலையத்திற்கு பஸ்சை ஓட்டி சென்றார். நகை பறிக்க முயன்ற பெண்களை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த இசக்கி மனைவி லட்சுமி(24), அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் மனைவி சாந்தி(27) என தெரிய வந்தது. இதில் லட்சுமியின் கையில் தேவி என பச்சை குத்தப்பட்டு உள்ளது. அவர் தவறான முகவரி கூறினாரா? என விசாரணை நடக்கிறது. சம்பவம் சிவகங்கை தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்ததால் 2 பெண்களையும் இளையான்குடி போலீசார் அங்கு ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News