செய்திகள்
மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 போ் கைது
அண்ணாமலைநகரில் மோட்டார்சைக்கிள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணாமலைநகர்:
அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணபதி, லட்சுமிராமன் மற்றும் போலீசார் வல்லம்படுகை சோதனைசாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி, விசாரித்தனர். அதில் அந்த நபர் ஓட்டி வந்தது, வல்லம்படுகை பகுதியில் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில், அவர் நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள விளந்திடசமுத்திரம் பகுதியை சேர்ந்த இலக்கியன் (வயது 24) என்பது தெரியவந்தது. இதேபோன்று சிதம்பரம் அம்மாபேட்டை அருகே போலீசார் வாகன சோதனையின் போது, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த பூம்புகார் அருகே உள்ள தர்மகுளம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (25), மயிலாடுதுறை பெருந்தோட்டம் பகுதியை சேர்ந்த ரகு (25) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அதில் இருவரும் சிதம்பரம் அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.