செய்திகள்
கொள்ளை

ஆவூர் அருகே மாட்டு வியாபாரி வீட்டில் 35 பவுன் நகைகள்- ரூ.4¾ லட்சம் கொள்ளை

Published On 2020-12-26 15:14 IST   |   Update On 2020-12-26 15:14:00 IST
ஆவூர் அருகே மாட்டு வியாபாரி வீட்டில் 35 பவுன் நகைகள் மற்றும் ரூ.4¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆவூர்:

புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே உள்ள ஆம்பூர்பட்டி நால்ரோட்டை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 55). விவசாயியான இவர் மாட்டு வியாபாரமும் செய்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா (45). இவர்களுக்கு ரகுபதி (27) என்ற மகன் உள்ளார். இவருக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் ரம்யா (20) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் ரம்யா திருமணத்தின்போது, வழங்கப்பட்ட 35 பவுன் நகைகளை கணவர் வீட்டில் உள்ள பழைய மற்றும் புதிய பீரோக்களில் வைத்து இருந்தார். இதேபோல் பழனிசாமி திருமணத்தின்போது, வந்த மொய்ப்பணம் மற்றும் மாடுகளை விற்ற பணம் என ரூ.4 லட்சத்து 72 ஆயிரத்தையும் வீட்டில் உள்ள பீரோவில் வைத்து இருந்தார்.

நேற்று காலையில் பழனிசாமி வெளியூரில் உள்ள அவரது உறவினரை பார்க்க சென்றுவிட்டார். ரகுபதி வேலைக்கு சென்று விட்டார். ரேணுகா மற்றும் அவரது மருமகள் ரம்யா ஆகிய இருவரும் நேற்று காலை 11 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு ஆடு, மாடுகளை தோட்டத்துக்கு மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுவிட்டனர்.

இதற்கிடையில் மதியம் 3 மணி அளவில் பழனிசாமி வீட்டுக்கு வந்தார். அப்போது, இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோக்களும் திறக்கப்பட்டு, அதில் உள்ள துணிகள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன.

மேலும் பீரோவில் இருந்த 35 பவுன் நகைகள் மற்றும் ரூ.4 லட்சத்து 72 ஆயிரமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதைஅறிந்து வீட்டுக்கு வந்த பழனிசாமியின் மனைவி ரேணுகா, மருமகள் ரம்யா ஆகியோர் பணம்-நகை கொள்ளை போனதால் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்துக்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மாத்தூர், மண்டையூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Similar News