செய்திகள்
கொலை

மணல்மேட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி கழுத்தை அறுத்து படுகொலை

Published On 2020-12-23 15:07 IST   |   Update On 2020-12-23 15:07:00 IST
மணல்மேட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். நகைக்காக இந்த கொலை நடந்ததா? என்று விசாரணை நடத்தி வரும் போலீசார், கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மணல்மேடு:

மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேட்டை அடுத்த நடுத்திட்டு மெயின் ரோட்டை சேர்ந்தவர் சண்முகம் மனைவி ஜானகி (வயது 72) . சண்முகம் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் ஜானகி தனியாக வசித்து வந்தார். இவரது மகன் பாரிராஜன். அரசு டாக்டரான இவர், மணல்மேட்டில் வேறு ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஜானகியின் வீட்டு பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், ஜானகியின் கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளனர்.

பின்னர் ஜானகி கழுத்தில் அணிந்து இருந்த 10 பவுன் சங்கிலியை அறுத்து எடுத்து சென்றுள்ளனர்.

நேற்று காலை ஜானகி வீட்டில் நிறுத்தி இருந்த காரை எடுப்பதற்காக டாக்டர் பாரிராஜன் வந்தார். அவரது கார் டிரைவர் ஜான்சன், ஜானகியை அழைத்துள்ளார்.

நீண்ட நேரமாக அழைத்தும் வீட்டுக்குள் இருந்து ஜானகி வெளியில் வராத காரணத்தால் பின்பக்க வழியாக சென்று பார்த்துள்ளார். அப்போது ஜானகி கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தது தெரிய வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து இந்த தகவலை டாக்டர் பாரிராஜனிடம் தெரிவித்தார்.

அவரும் ஓடி வந்து தனது தாய் கொலை செய்யப்பட்டுள்ளதை பார்த்து கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து அவர், மணல்மேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் நகைக்காக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருவதுடன், கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் நடந்த பகுதியிலேயே மணல்மேடு போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. போலீஸ் நிலையத்தின் அருகிலேயே மிகவும் துணிச்சலாக கொலையாளிகள் மூதாட்டியை கொலை செய்து நகையை பறித்துச்சென்ற சம்பவம் மணல்மேடு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Similar News