செய்திகள்
நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு தொடர்பா? - கமிஷனரிடம் மாமனார் புகார்
நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு தொடர்பா? என்பது குறித்து கமிஷனர் அலுவலகத்தில் ஹேம்நாத் தந்தை ரவிச்சந்திரன் புகார் அளித்துள்ளார்.
சென்னை:
பிரபல டி.வி. நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஹேம்நாத்தின் தந்தையும், சித்ராவின் மாமனாருமான பி.ரவிச்சந்திரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தற்போதுதான் எனக்கு பல சமூக வலைதளங்களில் வெளிவந்த தகவல்கள் மூலம் சித்ரா, ஏற்கனவே 3 ஆண்களை காதலித்துள்ளதாகவும், அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நின்றுள்ளதாகவும் தெரிய வருகிறது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் நெருக்கமான படத்தை வைத்துக்கொண்டு சித்ராவை மிரட்டியதாகவும், அரசியல்வாதிகள் தினமும் தொலைபேசியில் பேசியதாகவும் தொடர்ந்து செய்தி வந்துகொண்டுள்ளது.
ஒரு சில தொலைபேசி எண்கள் வந்தால் சித்ரா பதற்றத்துடன் தனியாக சென்று பேசுவார் என்றும், அந்த எண்களை அழித்துவிடுவார் என்றும் என் மகன் ஹேம்நாத் என்னிடம் ஏற்கனவே கூறியிருக்கிறார். எனவே அதன் அடிப்படையில், சித்ராவை மிரட்டிய நபர்களைக் கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சித்ராவின் தாயாருக்கு கூட உண்மை நிலவரம் தெரிந்தும், அவர் மிரட்டல் விடுத்த நபர்களுக்கு பயந்து அமைதி காத்து வருவதாகவும் எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரையில் சித்ரா மரணத்தில் உண்மை வெளியே வரவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.