செய்திகள்
நாகை அருகே வீடு புகுந்து 5 பவுன் நகை-பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
நாகை அருகே வீடு புகுந்து 5 பவுன் நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை அருகே கீச்சாங்குப்பம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அற்புத செல்வம் (வயது 34). மீனவர். இவர் கடந்த 15-ந்தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன், துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரிக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் இருந்த பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் பீரோவில் பார்த்த போது அதில் இருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆவியோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டின் பின் பக்கம் கதவை திறந்து கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த நகை, பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
மேலும் திருட்டு நடந்த வீட்டில் இருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று கொண்டது. யாரையும் கவ்விபிடிக்கவில்லை.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.