செய்திகள்
நகை திருட்டு

ஆவூர் அருகே கொத்தனார் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை, பணம் கொள்ளை

Published On 2020-12-17 06:19 IST   |   Update On 2020-12-17 06:19:00 IST
ஆவூர் அருகே கொத்தனார் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆவூர்:

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகாவிற்கு உட்பட்ட சாத்திவயல் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 44). கொத்தனார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் குடும்பத்தினருடன் திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில், கோபாலின் தாய் சின்னப்பிள்ளை (65) மட்டும் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு 100 நாள் வேலைக்கு சின்னப்பிள்ளை சென்றிருந்தார். பின்னர் வேலை முடிந்து மாலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கோபால், திண்டுக்கல்லில் இருந்து வீடு திரும்பினார். பின்னர் இதுகுறித்து மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் பீரோவில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளையும் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News