செய்திகள்
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் - 247 பேர் கைது
வேளாண் சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் 247 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்:
தமிழகம் முழுவதும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலும் தொழிற்சங்கத்தினரும், இடதுசாரி கட்சிகளும், விவசாய சங்கத்தினரும் தொடர்ந்து மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் முழக்க போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.
இதனையொட்டி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் முதல் மாவட்ட கிளையின் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. வேளாண் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மின்சார சட்டத் திருத்தம் தவிர்க்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.
தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் முருகன், இந்திய கம்யூனிஸ்டு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சவுந்தரபாண்டியன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா, வாழ்க விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் காளிராஜ், தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்தையா ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம், மாநில குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ.. ராமசாமி, முன்னாள் எம்.பி. அழகர்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர்அர்ச்சுனன் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆர்.எம். சண்முகசுந்தரம், ரகுராம், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநில குழு உறுப்பினர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்ட 41 பெண்கள் உள்பட 247 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.