செய்திகள்
கீரனூர் அருகே கார் வாங்க சேமித்து வைத்திருந்த 6 பவுன் நகை-பணம் திருட்டு
கீரனூர் அருகே கார் வாங்க சேமித்து வைத்திரந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கீரனூர்:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள கல்லுக்குமியல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 62). இவர் சைக்கிளில் டீ, பால், காப்பி மற்றும் கார வகைகள் விற்று பிழைப்பு நடத்தி வந்தார். இவரது மகன் சக்தி வாடகை கார் ஓட்டி வருகிறார்.
இந்தநிலையில் சக்தி சொந்தமாக கார் வாங்க நினைத்து, சிறுக, சிறுக சேமித்து தலா ஒரு பவுன் எடையுள்ள 5 மோதிரம், ஒரு பவுன் தங்க சங்கிலியும் மற்றும் மேலும் ரூ.2 லட்சம் கடனும் வாங்கி வீட்டில் உள்ள பீரோவில் வைத்து இருந்தார்.
இந்தநிலையில் வெளியூர் சென்று இருந்த தந்தையும், மகனும் நேற்று வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த மோதிரங்கள், தங்க சங்கிலி, ரூ.2 லட்சம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், இதனை திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து ஜெகநாதன் கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.