செய்திகள்
ஈரோடு அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
ஈரோடு அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் சுக்கிரமணியகவுண்டர் வலசு பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 51). இவருடைய மனைவி ஜெகதீஸ்வரி என்கிற ஜமுனா (40). இவர்களுக்கு வாய்பேச முடியாத கீர்த்தனா என்கிற மகள் உள்ளார். கீர்த்தனாவுக்கு கடந்த மே மாதம் திருமணம் நடந்தது.
அவர் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கீர்த்தனா தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். இந்தநிலையில் அவரது கணவர் ராஜ்குமார் தனது மனைவி கீர்த்தனாவை தன்னுடன் அழைத்து சென்று உள்ளார். ஆனால் கீர்த்தனாவை அனுப்பி வைக்க ஜமுனாவுக்கு விருப்பமில்லை.
இதனால் கீர்த்தனாவை தடுத்தும் அவர் தனது கணவருடன் சென்றுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ஜமுனா நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். உடனடியாக குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜமுனா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.