செய்திகள்
யானைகள்

பவானிசாகர் அருகே கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்

Published On 2020-12-05 17:04 IST   |   Update On 2020-12-05 17:04:00 IST
பவானிசாகர் அருகே காட்டு யானைகள் கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து நாசம் செய்துள்ளது.
பவானிசாகர்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பவானிசாகர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறி வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்வது தொடர் கதையாக உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புதுபீர்கடவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் அந்த பகுதியில் உள்ள விவசாயி செல்வம் (55) என்பவரது தோட்டத்துக்குள் நுழைந்தன. அங்கு 5 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த கரும்பு பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தின. இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் பட்டாசுகள் வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தும் யானைகளை விரட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர். சேதமடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News