செய்திகள்
புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள வாய்க்காலில் மழைநீர் செல்வதை கலெக்டர் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

அரசு அறிவிப்புகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2020-12-04 10:20 GMT   |   Update On 2020-12-04 10:20 GMT
புரெவி புயலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள அரசு அறிவிப்புகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் உமாமகேஸ்வரி அறிவுறுத்தி உள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் மழைநீர் செல்லும் வரத்து வாய்க்கால்கள் மற்றும் தாழ்வான பகுதிகளை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை எச்சரிக்கையை தொடர்ந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளிலும் மழைநீர் வாய்க்கால்கள் வழியாக செல்லும் வகையில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டது. இதன்படி புதுக்கோட்டை நகராட்சி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள வாய்க்கால், பெரியார் நகர், கம்பன் நகர், வரத்து வாய்க்கால்கள், சந்திரமதி கால்வாய், காட்டுப்புதுக்குளம் வரத்துவாரி போன்ற பல்வேறு பகுதிகளில் மழைநீர் செல்லும் வாய்க்கால்கள் மற்றும் தாழ்வான பகுதிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகராட்சியில் கூடுதல் வரத்து வாய்க்கால்களை தூர்வாரி அதிகப்படுத்த பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கையின் அடிப்படையில் இத்திட்டத்திற்கு தேவையான திட்ட மதிப்பீடு தயார் செய்ய நகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 77 இடங்கள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களிலுள்ள பள்ளி கட்டிடங்கள், திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தங்குதடையின்றி கிடைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புரெவி புயல் பாதிப்பு குறித்து மக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு மூலம் வழங்கப்படும் அறிவிப்புகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். மாவட்டத்தில் தற்பொழுது மழைக்காரணமாக சிறியளவில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலுள்ள முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தற்பொழுது பாதுகாப்பு மையங்களுக்கு வருகின்றனர். இந்த மையங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தரைப்பாலங்கள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று ஏரி குளங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதுடன் ஏற்கனவே உள்ள ஆயிரம் மணல் மூட்டைகளுடன் தற்பொழுது கூடுதலாகவும், மணல் மூட்டைகள் வைக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழையை எதிர்க்கொள்ள தேவையான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் பேரிடர் தொடர்பான தகவல்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தினை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது 04322 222207 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News