செய்திகள்
லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் செல்வகணபதி உள்பட 3 பேரை படத்தில் காணலாம்.

பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் உள்பட 3 பேர் கைது

Published On 2020-12-03 02:19 GMT   |   Update On 2020-12-03 02:19 GMT
கந்தர்வகோட்டையில் பட்டா வழங்க லஞ்சம் வாங்கியது தொடர்பாக துணை தாசில்தார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கந்தர்வகோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே கோமாபுரத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 40). தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தொண்டர் அணி மாநில தலைவராகவும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தலைவராகவும் உள்ளார். ராஜீவ் காந்தியின் தந்தையின் விளைநிலத்தை அவரும், அவரது சகோதரரும் பாகப்பிரிவினை செய்து கொண்டனர்.

பாகப்பிரிவினை செய்த நிலத்திற்கு பட்டா கோரி கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் ராஜீவ் காந்தி விண்ணப்பித்தார். அப்போது பட்டா கொடுக்காமல் அதிகாரிகள் இழுத்தடித்துள்ளனர். இந்த நிலையில் கோமாபுரம் வட்டத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஜெரோன் (30), ராஜீவ் காந்தியை அணுகி பட்டா வழங்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது 7 சர்வே எண்ணுக்குரிய பட்டாவுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.35 ஆயிரம் தர வேண்டும் என அதிகாரிகள் கூறியதாக ஜெரோன் கேட்டிருக்கிறார். இந்த நிலையில் லஞ்ச கொடுக்க விரும்பாத ராஜீவ்காந்தி, புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார், அவரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.15 ஆயிரத்தை கொடுத்து அதிகாரிகளிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து அந்த பணத்தை கொடுப்பதற்காக ஜெரோனை, ராஜீவ் காந்தி தொடர்பு கொண்டார். அப்போது கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்திற்கு வருமாறு அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராஜீவ் காந்தி நேற்று பகலில் அங்கு சென்றார். அங்கு அலுவலகத்தின் முதல் தளத்திற்கு செல்லும் படியில் ரூ.15 ஆயிரத்தை கிராம நிர்வாக அலுவலர் ஜெரோனிடம் ராஜீவ்காந்தி கொடுத்தார். அதனை வாங்கி தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, துணை தாசில்தார் செல்வகணபதி அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு செல்வகணபதியுடன், நில அளவையர் முத்துவும் உடன் இருந்தார்.

அப்போது நாம் கேட்ட தொகையை கொடுத்துவிட்டார், பட்டா மாறுதல் செய்து கொடுத்துவிடும்படி அவர்களிடம், ஜெரோன் கூறியிருக்கிறார். அப்போது பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என ஜெரோனிடம் செல்வகணபதியும், முத்துவும் கூறியுள்ளனர். இதற்கிடையில் அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் பீட்டர், தமிழரசி மற்றும் போலீசார் விரைந்து வந்து ஜெரோன், செல்வகணபதி, முத்து ஆகிய 3 பேரையும் பிடித்து கைது செய்தனர். மேலும் ஜெரோன் வைத்திருந்த ரூ.15 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதன்பின் துணை தாசில்தார் அமர்ந்திருந்த இருக்கையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். மேலும் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். தாசில்தார் அலுவலகத்திற்கு மாலை 3 மணி அளவில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மற்றும் சோதனையை முடித்துக்கொண்டு இரவு 7.45 மணிக்கு வெளியே வந்தனர். பட்டா வழங்க லஞ்சம் வாங்கியது தொடர்பாக துணை தாசில்தார் உள்பட 3 பேர் கைதான சம்பவம் கந்தர்வகோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News