செய்திகள்
பேரணாம்பட்டு, குடியாத்தத்தை சேர்ந்த 5 சாராய வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது
பேரணாம்பட்டு, குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 5 சாராய வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
பேரணாம்பட்டு:
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் உத்தரவின்பேரில் பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். பேரணாம்பட்டு அருகே கள்ளிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சாராய வியாபாரிகளான சுதாகர் (வயது 35), சரண்ராஜ் (28), மகி (35) ஆகிய 3 பேர் தொடர்ந்து சாராயம் காய்ச்சி விற்றதால் மேற்கண்ட 3 பேரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கைதான சுதாகர், சரண்ராஜ், மகி ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் அடைக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் பரிந்துரை செய்ததன்பேரில் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், மேற்கண்ட 3 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் மத்திய சிறையில் உள்ள 3 சாராய வியாபாரிகளிடம் உத்தரவு நகல் வழங்கப்பட்டது.
அதேபோல் குடியாத்தத்தை அடுத்த எர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன் (வயது 41), ராமாலை பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (30). இருவரும் அப்பகுதியில் சாராயம் விற்றதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது சாராயம் விற்ற வழக்குகள் உள்ளதால், இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் பரிந்துரை செய்ததன்பேரில் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், சாராய வியாபாரிகளான குபேந்திரன் மற்றும் புருஷோத்தமனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.