செய்திகள்
குடிநீர் தேவைக்காக உடனடியாக போர்வெல் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போர்வெல் அமைக்க கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

Published On 2020-11-12 09:45 GMT   |   Update On 2020-11-12 09:45 GMT
குடியாத்தம் அருகே போர்வெல் அமைக்கக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடியாத்தம்:

குடியாத்தம் ஒன்றியம் டி.பி.பாளையம் ஊராட்சியில் அரிகவாரிபல்லி, தாசராபல்லி, கணகர்பட்டி, டிபி.பாளையம் உள்ளிட்ட கிராமப் பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளது. அப்பகுதியில் போர்வெல் அமைத்து, 4 கிராமங்களுக்குக் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அதன்பேரில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் டி.பி.பாளையம் கிராமப் பகுதியில் போர்வெல் அமைத்து, அங்கிருந்து பைப் லைன் மூலமாக குடிநீர் வினியோகம் செய்ய மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கு ஆரம்ப கட்டப்பணிகளாக அரிகவாரிபல்லி கிராமத்தில் போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதால், போர்வெல் அமைக்கப்படவில்லை.

இதைக் கண்டித்து அரிகவாரிபல்லி கிராம மக்கள் எங்கள் பகுதியில் போர்வெல் அமைத்து, உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி 150-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் காலிக்குடங்களுடன் குடியாத்தத்தை அடுத்த சித்தூர் சாலையில் சாமிரெட்டிப்பல்லி கிராம பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.ஹேமலதா, பரதராமி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போர்வெல் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். சாலை மறியலால் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுந்து நின்றன. பின்னர் போலீசார், போக்குவரத்தை சரி செய்தனர்.
Tags:    

Similar News