செய்திகள்
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை - வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கல்யாண சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் தற்போது சம்பா- தாளடி நெல் நாற்று விடுதல் மற்றும் நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் நாகை மாவட்டத்திற்கு தேவையான யூரியா, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து நடப்பு மாதத்துக்கு தேவையான மீதி உள்ள உரங்களும் நிறுவனங்களிடமிருந்து பெற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உர விற்பனை மையம் ஆய்வின் போது உர மூட்டைகளில் அச்சிடப்பட்ட தொகையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, உர உரிமத்தை புதுப்பிக்காமல் உரங்களை விற்பது, அனுமதி பெறப்படாத கிடங்குகளில் இருப்பு வைத்திருப்பது, உரிய அனுமதியின்றி பிற மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்வது, ஒரே நபருக்கு ஒட்டுமொத்தமாக உரங்கள் விற்பனை செய்யப்படுவது போன்றவை கண்டறியப்பட்டால் அவர்களது உர உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகள் உரம் வாங்க செல்லும் போது அவசியம் தங்களது ஆதார் அட்டையுடன் சென்று கைரேகை பதிவு செய்து, உரம் பெற்றுக் கொண்டு அதற்கான ரசீதை பெற்று கொள்ள வேண்டும். உர விற்பனையாளர்கள் தங்களது கடைகளில் விலைப்பட்டியல் அடங்கிய விவரப் பலகையை உபயோகிப்பாளர்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். உரம் வாங்க வரும் விவசாயிகளுக்கு பிற தேவையற்ற இடு பொருட்களை கட்டாயத்தின் பேரில் விற்பனை செய்யக்கூடாது. உர மூட்டைகளின் எடை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் குறைபாடுகள் தெரிய வந்தால் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களிடம் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.