null
தெறி ரீ-ரிலீஸ் தள்ளி வைப்பு - தயாரிப்பாளர் தாணுவுக்கு இயக்குநர் மோகன் ஜி நன்றி
- ஜனவரி 23 ஆம் தேதி மங்காத்தா ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது.
- தெறி படத்தின் தயாரிப்பாளரிடம் மோகன் ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படதிற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டதால் அப்படம் குறித்தபடி ஜனவரி 9 வெளியாகாதது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.
இந்நிலையில், தெறி படம் வரும் 23ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்தார். தற்போது தெறி ரீ-ரிலீஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இதனையடுத்து, தெறி படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைக்கவேண்டும் என்று கலைப்புலி எஸ். தாணுவிற்கு திரௌபதி 2 பட இயக்குநர் மோகன் ஜி வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "கலைப்புலி எஸ். தாணு சார், எங்களைப் போன்ற வளர்ந்து வரும் குழுவினர்களுக்கு ஆதரவளித்து, வரும் ஜனவரி 23ஆம் தேதி வெளியாகவிருக்கும் 'தெறி' திரைப்படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் புதிய தயாரிப்பாளர்களுக்கும் வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கும் நிறைய நன்மைகளைச் செய்துள்ளீர்கள். எனவே, எங்கள் திரௌபதி 2 திரைப்படம் முக்கிய திரையரங்குகளில் வெளியாக ஆதரவளித்து, ஒரு பிரம்மாண்டமான வெளியீட்டிற்கு எங்களுக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று பதிவிட்டார்.
இந்த பதிவை பகிர்ந்த கலைப்புலி எஸ். தாணு, "புதிய இயக்குனர்கள், நல்ல படைப்புகள் மற்றும் வளரும் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே V Creations நிறுவனத்தின் தலையாய பொறுப்பு. அந்த நோக்கத்தை முன்னிட்டு "தெறி" திரைப்படத்தின் வெளியீட்டின் முடிவு நாளை அறிவிக்கப்படும். நன்றி" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், தெறி படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் தாணு ஒத்தி வைத்துள்ளதாக இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "எங்களின் வேண்டுகோளை ஏற்று தளபதி விஜய் சார் அவர்களின் #தெறி திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்த கலைப்புலி தாணு சார் அவர்களுக்கு என் தயாரிப்பாளர் மற்றும் எங்கள் திரெளபதி 2 திரைப்பட குழு சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
திரௌபதி 2 வெளியாகும் அதே நாளில் மங்காத்தா, தெறி ஆகிய 2 படங்கள் ரீ- ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், தெறி படத்தின் தயாரிப்பாளரிடம் மட்டும் மோகன் ஜி கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஜன நாயகன் ரிலீசாகாத விரக்தியால் இருக்கும் விஜய் ரசிகர்கள் தெறி படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைப்பு என்ற தகவலை கேட்டு கடுப்பாகியுள்ளனர்.