செய்திகள்
ஆங்கில பேச்சு பயிற்சி போட்டியில் வென்ற மாணவி ஒருவருக்கு ஆசிரியை பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கியதை காணலாம்.

அரசு பள்ளி மாணவர்களிடையே ஆங்கில பேச்சுத்திறனை அதிகரிக்க வாட்ஸ்-அப் மூலம் போட்டி

Published On 2020-10-31 11:08 GMT   |   Update On 2020-10-31 11:08 GMT
மாணவர்களிடையே ஆங்கில பேச்சுத்திறனை அதிகரிக்க வாட்ஸ்-அப்பில் அரசு பள்ளி சார்பில் போட்டி நடத்தி, வெற்றி பெறுபவர்களின் வீடுகளுக்கு ஆசிரியர்கள் நேரில் சென்று பரிசு வழங்கி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பொதுமக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைய தொடங்கி உள்ளன. ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. மாணவர்களது கல்வி பாதிக்காமல் இருக்க ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துதல், வாட்ஸ்-அப் குழுக்கள் ஏற்படுத்தி பாடம் கற்பித்தல் உள்ளிட்ட பணிகளை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.

கல்வி தொலைக்காட்சியிலும் பாடங்கள் ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படாத சூழலிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில் மாணவர்களிடையே ஆங்கில பேச்சுத்திறனை அதிகரிக்க வாட்ஸ்-அப்பில் போட்டி நடத்தி பரிசு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த பள்ளி, அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் உள்ள ஆவணத்தான்கோட்டை மேற்கு அரசு நடுநிலைப்பள்ளி ஆகும். கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை இந்த பள்ளியில் உள்ளது.

கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்களுக்காக வாட்ஸ்-அப் குழுக்கள் ஏற்படுத்தில் அதில் பாடங்களை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களுக்கு அவர்களது அருகில் வசிக்கும் நபர்களின் செல்போன் எண்ணிற்கு அனுப்பி பாடங்களை படிக்க வைக்கின்றனர். மொத்தம் உள்ள 166 மாணவர்களில் 100 மாணவர்கள் வாட்ஸ்-அப் குழுவில் உள்ளனர். பள்ளிகள் திறந்திருக்கும் காலத்தில் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சாற்றலை வளர்க்க குறிப்பிட்ட மணி நேரங்கள் வகுப்பு நடைபெறுவது வழக்கம். தற்போது மாணவர்களுக்கு பள்ளிக்கு வரமுடியாத நிலையில் அவர்களிடம் கற்றலில் எந்த குறைபாடும் இல்லாத அளவிற்கு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய முறையை கையில் எடுத்தனர். வாட்ஸ்-அப் குழுவில் ஆங்கிலம் பேசும் முறை தொடர்பாக ஆசிரியர்கள் ஒலி வடிவில் ஆடியோவாகவும், எழுத்து மூலமாகவும் பதிவிடுகின்றனர். இதனை மாணவர்கள் கேட்டும், பார்த்தும் கற்று வருகின்றனர். மேலும் ஆங்கிலம் பேசும் புலமையை வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவர்களிடம் கற்றலை ஊக்கப்படுத்தும் வகையில் வாரந்தோறும் கடைசி நாளில் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வாரத்தில் நடத்தப்பட்ட ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பில் மாணவர்கள் கற்றதில் இருந்து போட்டி நடத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் எழுத்து வடிவிலும், ஆடியோவாகவும் பதிலை பதிவிட்டு வருகின்றனர். ஆசிரியர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக தாங்கள் கற்ற அறிவின் மூலம் வாட்ஸ்-அப்பில் பதிவிட்டு ஆற்றலை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களின் வீடுகளுக்கு ஆசிரியர்கள் நேரில் சென்று பரிசு, சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றனர். முதலில் 10 பேர் எனவும், அதன்பின் 5 பேர் எனவும், தற்போது 3 பேருக்கு எனவும் பரிசு வழங்கப்படுகிறது. இந்த போட்டி முறை மாணவர்களிடம் அதிகம் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலம் பேசும் புலமையை பெற்று வருவது அவர்களது பெற்றோரிடமும், அப்பகுதி பொதுமக்களிடமும், கல்வியாளர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மாணவர்களின் கற்றலிலும் தொய்வு இல்லாமல் படித்து வருவது அவர்களது ஆற்றலையும் மேம்படுத்துகிறது. அரசுப்பள்ளி ஆசிரியர்களின் புதிய முயற்சிக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News