செய்திகள்
கொலை

காஞ்சீபுரம் அருகே ராணுவ வீரரின் மகன் குத்திக்கொலை- 4 பேர் கைது

Published On 2020-10-27 02:31 GMT   |   Update On 2020-10-27 02:31 GMT
காஞ்சீபுரம் அருகே முன்னாள் ராணுவ வீரரின் மகன் குத்திக்கொலை செய்யப்பட்டார் இதையொட்டி 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த திருகாவேரிப்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன் எலிசா (வயது 21). பிளஸ்-2 படித்துள்ளார். எலிசா தனது நண்பரின் சகோதரியின் குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்காக பழைய சிறு காவேரிபாக்கத்திற்கு சென்றார். அங்கு பிறந்தநாள் விழாவை முடித்துவிட்டு எலிசா மறுபடியும் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டுக்கு வந்தார். சிறுகாவேரிப்பாக்கம் வந்தபோது அங்கு மறைந்து இருந்த 4 பேர் அவரை வழிமறித்து இரும்பு குழாயால் அடித்தனர். இதில் எலிசா மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் எலிசா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பாலுசெட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் போலீசாருடன் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் சிறுகாவேரிப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தாமோதரன் என்கிற தாமு (20), இவரது நண்பர்கள் ஹரிகரன் என்கிற காமு (20), கிருஷ்ணகுமார் (20), குலசேகரன் என்கிற கிஷோர் (22) ஆகியோரை பிடித்து பாலுசெட்டி சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். இதில் தாமோதரனின் குடும்பத்தினருக்கும் உயிரிழந்த எலிசாவுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததும் அதன் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதும் தெரியவந்தது.

போலீசார் 4 பேரையும் கைது செய்து காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து கத்தி, இரும்பு குழாய், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News