செய்திகள்
வேலூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரிடம் வழிப்பறி- வாலிபர் கைது
வேலூர் அருகே நடந்து சென்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரிடம் வழிப்பறி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள துத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 59), முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர், நேற்று இடையஞ்சாத்து கூட்ரோடு அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென பெருமாளை வழிமடக்கி கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டார். அப்போது பெருமாள் தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர் கத்தியால் பெருமாளை குத்த முயன்றார். ஆனால் பெருமாள் சுதாரித்துக்கொண்டு விலகினார். பின்னர் மர்ம நபர், பெருமாள் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.2 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது, தொரப்பாடி நடவாழியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 35) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.