செய்திகள்
மல்லியம்மன் கோவில் அருகே உள்ள அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய காட்சி.

சத்தியமங்கலத்தில் பலத்த மழை- கோவிலை மூழ்கடித்த வெள்ளம்

Published On 2020-09-03 14:37 IST   |   Update On 2020-09-03 14:37:00 IST
சத்தியமங்கலத்தில் நேற்று பலத்த மழை பெய்ததால் வெள்ளம் நீர் கோவிலை மூழ்கடித்து சாலையில் ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்தாலும் ஒரு சில பகுதிகளில் மாலை நேரத்தில் லேசானது முதல் கன மழை பெய்து வருகிறது.

கடந்த திங்கட்கிழமை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. 2-வது நாளாக நேற்று முன்தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதில் அதிகபட்சமாக குண்டேரிப்பள்ளம் பகுதியில் 85 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இதே போல் பவானிசாகர், சத்தி, தாளவாடி, நம்பியூர், சென்னிமலை, கொடிவேரி, ஈரோடு பகுதிகளிலும் மழை பெய்தது.

சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் நேற்று காலை மிதமான மழை பெய்தது. மாலையில் கன மழையாக மாறியது. இந்த மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் பல்வேறு ஓடைகள் வழியாக பெரும்பள்ளம் அணைக்கு வந்து சேரும்.

கடம்பூர் மலை பகுதியில் பலத்த மழை பெய்ததால் மலைப் பாதையில் உள்ள மல்லியம்மன் கோவில் அருகே உள்ள அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த வெள்ளம் கோவிலை மூழ்கடித்து சாலையில் ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியவில்லை. 3 மணி நேரத்திற்கு பின்னரே சாலையில் கொட்டிய தண்ணீரின் வேகம் குறைந்தது. அதன் பின்னர் போக்குவரத்து தொடங்கியது.

Similar News