செய்திகள்
சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதை காணலாம்.

மதுரை- சிவகங்கை மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த மழை

Published On 2020-09-02 08:06 GMT   |   Update On 2020-09-02 08:06 GMT
கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகங்கை:

தென் தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் வானிலை மையம் அறிவித்து இருந்தது. அதன்படி மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் கரு மேகங்கள் திரண்டு மழை பெய்து வருகின்றன.

அதன்படி மதுரை நகரில் நேற்று பகலில் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் இதமான காற்றுடன் கருமேகம் திரண்டு வந்தன. பின்னர் 5 மணியளவில் திடீரென்று பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் நகரில் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

மாசி வீதிகளில் ஸ்மார் சிட்டி திட்டத்திற்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே மாசி வீதிகளில் நடந்து சென்றனர். கீழவெளி வீதி, தெற்குவெளி வீதி, பெரியார் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மீண்டும் இரவு 10 மணிமுதல் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது.

திருமங்கலம், வாடிப்பட்டி, சோழவந்தான், மேலூர், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இரவு நேரங்களில் கொட்டித்தீர்த்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்தடையும் ஏற்பட்டது.

மதுரை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

இடையபட்டி -35.50

தல்லாகுளம் -32.30

மதுரை தெற்கு -35.60

உசிலம்பட்டி -27.40

சிட்டம்பட்டி -26.20

ஏர்போர்ட் -24.10

புலிப்பட்டி -23.80

கள்ளிக்குடி -17.80

திருமங்கலம் -15.20

ஆண்டிபட்டி -12.80

குப்பணம்பட்டி -10.40

மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 503.10 மில்லி மீட்டர் ஆகும்.

கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் விவசாயத்திற்காக ஏற்கனவே வைகை அணையில் இருந்து பெரியார் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பெய்து வரும் மழையால் விவசாய பணிகள் மும்முரமடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று மாலை பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. சிவகங்கையில் நேற்று மாலை ஒரு மணிநேரமும், இரவு விட்டுவிட்டு பலத்த மழையும் பெய்தது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியது.

காளையார்கோவில், தேவகோட்டை, கல்லல், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.

இதேபோல் மானாமதுரையில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது. 1 மணிநேரத்துக்கும் மேலாக பெய்த இந்த மழையால் அங்குள்ள மண்பாண்ட தொழிற்கூடங்களில் மழைநீர் புகுந்தது. இதனால் இன்று தொழிலாளர்கள் வேலையை தொடங்க முடியாமல் அவதி அடைந்தனர். மானாமதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் பெய்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News