செய்திகள்
கோப்புபடம்

கொரோனா கண்காணிப்பு மையத்தில் டிரைவர் தற்கொலை

Published On 2020-08-29 17:19 IST   |   Update On 2020-08-29 17:19:00 IST
குவைத்தில் இருந்து சென்னை வந்த டிரைவர் கொரோனா கண்காணிப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டபோது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீபெரும்புதூர்:

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் பாலாஜி (வயது 32). குவைத் நாட்டில் டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து குவைத் நாட்டுக்கு சென்றார். அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் பாலாஜி நேற்று அதிகாலை குவைத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தார். வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி மற்றும் கல்லூரி வளாகத்தில் பரிசோதனை செய்து 15 நாள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கும் மையம் அமைந்துள்ளது.

பாலாஜி இந்த கொரோனா கண்காணிப்பு மையத்துக்கு நேற்று அதிகாலை 3 மணியளவில் வந்தார். இந்த மையத்துக்கு வந்த பாலாஜி மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் தான் தங்கி இருந்த முதல் மாடி கட்டிடத்தில் லிப்ட் அமைப்பதற்காக கட்டுமான பணி நடந்து வரும் வழியாக கீழே குதித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அங்கு தேங்கி இருந்த தண்ணீரில் பாலாஜி அசைவின்றி கிடந்தார். அவரை மீட்டு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரித்து வருகின்றனர்.

Similar News