செய்திகள்
நல்லவாடு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தை நாராயணசாமி திறந்து வைத்தார்

உப்பனாற்றின் குறுக்கே தடுப்பணை- நாராயணசாமி தகவல்

Published On 2020-08-21 02:53 GMT   |   Update On 2020-08-21 02:53 GMT
நல்லவாடு கிராமத்தில் உப்பனாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பாகூர்:

மணவெளி தொகுதி தவளக்குப்பம் - நல்லவாடு இடையே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும், நல்லவாடு உப்பனாற்றின் குறுக்கே உள்ள சிறிய பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்ற வேண்டும் என்று கிராம மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். மக்களின் இந்த கோரிக்கையை தொகுதி எம்.எல்.ஏ.வான அனந்தராமன் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

இதனையடுத்து, நபார்டு வங்கி மற்றும் புதுச்சேரி அரசின் பங்களிப்பில் ரூ.3 கோடி செலவில் தவளக்குப்பம் - நல்லவாடு சாலையை சீரமைத்து, உயர்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கி, நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், பாலத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.

விழாவுக்கு அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம் வரவேற்றார். முதல்-அமைச்சர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பாலத்தை திறந்துவைத்தார். விழாவின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தரை மட்ட பாலம் தற்போது உயர் மட்ட பாலமாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக நல்லவாடு கிராமத்தை சேர்ந்தவர்கள் மழை, வெள்ளம் போன்ற காலங்களில் பாதிப்பு இன்றி இந்த வழியாக செல்ல முடியும். மேலும், இங்கு உப்பனாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டு, நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் உள்ளது போன்ற படகு குழாம் அமைத்து சுற்றுலா பயணிகளின் வருகையை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் பொதுப்பணித்துறை (கட்டிடங்கள் மற்றும் சாலை) செயற்பொறியாளர் சாய் சுப்பிரமணியன், உதவி பொறியாளர் கோபி, இளநிலை பொறியாளர் பூங்காவனம், மணவெளி தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் ராமு மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News