செய்திகள்
மலர்கொடி

அரியலூர் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் மூதாட்டி உள்பட 2 பேர் பலி

Published On 2020-08-20 13:47 IST   |   Update On 2020-08-20 13:47:00 IST
அரியலூர் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் மூதாட்டி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள விழுதுடையான் கிராமத்தை சேர்ந்தவர் மெய்யழகன். இவரது மனைவி மலர்கொடி (வயது 60). சம்பவத்தன்று இவர் ஆண்டிமடத்தில் உள்ள ஒரு வங்கியில் பணம் எடுப்பதற்காக உறவினர் வெங்கடேசன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஆண்டிமடம் வந்தார்.

இதனிடையே அவர்கள் விருத்தாச்சலம்-ஜெயங்கொண்டம் ரோட்டில் ஆண்டிமடம் கடை வீதியில் ரோட்டை கடக்க முயன்றபோது, பின்னால் வந்த லாரி வெங்கடேசன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நடுரோட்டில் விழுந்த மலர்கொடியின் தலையில் லாரி ஏறி, இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வெங்கடேசன் ரோட்டோரத்தில் தூக்கி வீசப்பட்டதால் அவர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இதற்கிடையில் பொதுமக்கள் கூடியதும், லாரி டிரைவர் லாரியை அங்கு நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் உடையார்பாளையம் அருகே உள்ள மூர்த்தியான் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன்(72). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து அப்பகுதியில் உள்ள கடைவீதிக்கு நடந்துசென்றார். அப்போது இடையார் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (21) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் காசிநாதன் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த காசிநாதனை, அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோசை கைது செய்தனர்.

Similar News