செய்திகள்
புதுச்சேரியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 9 பேர் பலி
புதுச்சேரியில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 9 பேர் பலியாகி உள்ளனர். புதிதாக 370 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதுவரை ஒரே நாளில் அதிகபட்சமாக 7 பேர் வரை இறந்தது புதிய உச்சமாக இருந்து வந்தது.
அதாவது, மாநிலத்தில் நேற்று முன்தினம் காலை 10 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் 1,106 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 370 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 282 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஏற்கனவே இருந்ததைவிட ஒரேநாளில் அதிகபட்சமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதாவது சுத்துக்கேணியை சேர்ந்த 48 வயது ஆண் புதுவை அரசு ஆஸ்பத்திரியிலும், முல்லா வீதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி, லாஸ்பேட்டை செல்லப்பெருமாள்பேட்டையை சேர்ந்த 53 வயது ஆண், உறுவையாறு ஜெயராம் நகரை சேர்ந்த 39 வயது ஆண் ஆகியோர் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யிலும், திலாசுப்பேட்டை மதுரம் நகரை சேர்ந்த 60 வயது முதியவர், வைசியாள் வீதியை சேர்ந்த 79 வயது முதியவர், மூலக்குளம் மோதிலால் நகரை சேர்ந்த 62 வயது முதியவர் ஜிப்மரிலும், காலாப்பட்டு காந்தி நகரை சேர்ந்த 60 வயது மூதாட்டி, அரும்பார்த்தபுரத்தைச் சேர்ந்த 52 வயது ஆண் ஆகியோர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் உயிரிழந்துள்ளனர். சாவு எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. அதாவது புதுச்சேரி பிராந்தியத்தில் 104 பேரும், காரைக்கால் மாவட்டத்தில் 6 பேரும், ஏனாமில் 13 பேரும் உயிரிழந்துள்ளனர். மாகியில் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை.
புதுவை மாநிலத்தில் 57 ஆயிரத்து 25 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 47 ஆயிரத்து 202 பேருக்கு தொற்று இல்லை என்று தெரியவந்தது. இன்னும் 709 பேரின் சோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.
ஓட்டுமொத்தமாக 8 ஆயிரத்து 396 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,621 பேர் ஆஸ்பத்திரியிலும், 1,743 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 4 ஆயிரத்து 909 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
குணமடைந்தோர் விகிதம் 58.47 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.46 சதவீதமாகவும் உள்ளது.