செய்திகள்
முதல்-அமைச்சர் நாராயணசாமி

ரோடியர் மில் மூடப்படுவதற்கு கவர்னர் கிரண்பேடியே காரணம்- நாராயணசாமி குற்றச்சாட்டு

Published On 2020-08-18 11:47 IST   |   Update On 2020-08-18 11:47:00 IST
ரோடியர் மில் மூடப்படுவதற்கு கவர்னர் கிரண்பேடியே காரணம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:

முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களில் 58 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதேபோல் இறப்புவிகிதத்தையும் குறைக்கவேண்டும். அதிகப்படியாக தொற்று பரிசோதனைகளையும் செய்து வருகிறோம். இப்போது காரைக்காலில் உமிழ்நீர் பரிசோதனை மையத்தை அமைத்துள்ளோம்.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று மக்கள் மிகப்பெரிய கூட்டமாக கூடியுள்ளனர். மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. காவல்துறையும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது தொடர்பாக அறிவுறுத்தி வருகிறது. ஆனால் அதை பொதுமக்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. புதுவையில் திருக்கனூர், முத்தியால்பேட்டை, ரெட்டியார்பாளையம் பகுதிகளில் அதிக பாதிப்பு உள்ளது.

புதுவையில் திட்டமிட்டபடி இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணிவரை முழுஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. ஊரடங்கின்போது மருந்தகங்கள், பால் பூத்துகள் இயங்கும். வீடுகளுக்கு கியாஸ் சப்ளை செய்யலாம். பெட்ரோல் பங்க், காய்கறி, மளிகை கடைகள் என அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.

இப்போது செவ்வாய்க்கிழமை பரீட்சார்த்தமாக முழு ஊரடங்கை அமல்படுத்துகிறோம். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. இதுதொடர்பாக எம்.எல்.ஏ.க்கள், மருத்துவர்கள், அதிகாரிகளிடம் பேசி வருகிறோம்.

ரோடியர் மில் பிரச்சினை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளன. விஜயன் கமிட்டி பரிந்துரையின்பேரில் 3-வது யூனிட்டை நடத்துவது, மற்ற பிரிவுகளை சிறப்பு குழு அமைத்து ஆய்வு செய்து அதன் பரிந்துரையின்படி செயல்படுவது என்று முடிவு செய்தோம். இதனையே முதல் கோரிக்கையாக வைத்து கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினோம்.

மில்லை இயக்குவது தொடர்பான கோப்புக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்காமல் மில்லை மூடவேண்டும் என்கிறார். இதுதொடர்பான அமைச்சரவையின் முடிவினை எதிர்த்து மத்திய அரசுக்கு கோப்பினை அனுப்பினார். நாங்கள் மில் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்கவேண்டும் என்றோம். தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய பணப்பலன்களை பட்டானூரில் உள்ள மில்லுக்கு சொந்தமான இடத்தை விற்று கொடுக்க முடிவு செய்தோம். இதுதொடர்பாக மத்திய அரசுக்கும் கடிதம் எழுதி உள்ளேன்.

ஆனால் கவர்னர் கிரண்பேடி தன்னிச்சையாக முடிவு செய்து மில்லை மூட உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். ரோடியர் மில் மூடப்பட்ட நிலையிலும் தொழிலாளர்களுக்கு சம்பளம் அளிக்க ஒவ்வொரு ஆண்டும் ரூ.24 கோடி நிதி ஒதுக்கி தந்தோம். இந்த ஆண்டுகூட ரூ.14 கோடி ஒதுக்கி உள்ளோம். கடந்த ஆண்டு அந்த நிதியை தரவிடாமல் கவர்னர் தடுத்து நிறுத்தினார். ரோடியர் மில் மூடப்படுவதற்கு முழு காரணமும் கவர்னர் கிரண்பேடிதான்.

கவர்னரின் அதிகார துஷ்பிரயோகத்தை மத்திய அரசிடம் எடுத்துக்கூறி மில்லை தொடர்ந்து நடத்த அனைத்துக் கட்சி தலைவர்களுடன் மத்திய ஜவுளித்துறை மந்திரியை சந்தித்துப் பேசினோம். அவர்களும் ஒரு குழுவை அனுப்பி ஆய்வு செய்வதாக கூறினார்கள். எங்கள் அரசு தொழிலாளின் பக்கம் நிற்கிறது. ரோடியர் மில்லுக்கு சொந்தமான பட்டானூர் நிலத்தை விற்க அனுமதிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளோம். ரோடியர் மில் தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றம் செல்லவும் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News