செய்திகள்
விபத்து

மாங்காடு அருகே வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்- வாலிபர் பலி

Published On 2020-08-16 15:20 IST   |   Update On 2020-08-16 15:20:00 IST
மாங்காடு அருகே வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பூந்தமல்லி:

குன்றத்தூர் கருமாரியம்மன் நகர் பவானியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவா (வயது 21). இவரது நண்பர் ரவிக்குமார் (21). நேற்று முன்தினம் கிரிக்கெட் விளையாடி விட்டு இரவு பூந்தமல்லி சென்று வருவதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை ரவிக்குமார் ஓட்டினார். பின்னால் தேவா அமர்ந்து இருந்தார். வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை மாங்காடு அடுத்த தெற்கு மலையம்பாக்கம் அருகே செல்லும்போது முன்னால் சென்று கொண்டிருந்த வேன் மீது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட தேவா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். ரவிக்குமார் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News