செய்திகள்
சுகாதார மந்திரி கே.கே. ஷைலஜா

கேரள மாநிலத்தில் தினசரி 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம் - சுகாதார மந்திரி ஷைலஜா தகவல்

Published On 2020-08-15 10:04 GMT   |   Update On 2020-08-15 10:04 GMT
கேரள மாநிலத்தில் தினசரி 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம் என அந்த மாநிலத்தின் சுகாதார மந்திரி கே.கே.ஷைலஜா கூறினார்.
திருவனந்தபுரம்:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு முதன்முதலாக கேரள மாநிலத்தில்தான் பதிவானது. சீனாவில் கொரோனா வைரஸ் தோன்றிய உகான் நகரில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவிக்கு கொரோனா பாதித்தது, ஜனவரி 30-ந் தேதி உறுதியானது. தொடர்ந்து 2-வது, 3-வது கொரோனா நோயாளிகளும் கேரள மாநிலத்தில்தான் பதிவு ஆனார்கள். அவர்களும்கூட உகானில் இருந்து திரும்பியவர்கள்தான்.

மே 5-ந் தேதி வரை 500 பேருக்கு அங்கு பாதிப்பு பதிவானது. அதே மாதத்தின் 27-ந் தேதி பாதிப்பு 1,000 என இரு மடங்கானது. ஜூலை 4-ந் தேதி பாதிப்பு 5 ஆயிரம் என சென்றது. 12 நாளில் அந்த எண்ணிக்கை 10 ஆயிரம் என இரட்டிப்பு ஆனது. ஜூலை 28-ந் தேதி இது இரு மடங்கை கடந்து விட்டது. நேற்று 1,564 பேருக்கு தொற்று உறுதியானதின்மூலம் மொத்த பாதிப்பு என்பது 39 ஆயிரத்து 708 ஆக அதிகரித்தது.

ஆரம்பத்தில் கேரள மாநிலம், தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் இப்போது அங்கும் தொற்று பரவல் அதிகரித்து வருவது, அந்த மாநில மக்களை கவலைக்குள்ளாக்கி வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுத்து நிறுத்தும் வகையில் கேரள மாநிலத்தில் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ சார்பு பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஆகியோரை உள்ளடக்கிய கொரோனா படை உருவாக்கப்படும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் கடந்த 23-ந் தேதி அறிவித்தார்.

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தற்காப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்கு அதிகமான மக்கள் தேவை, அதற்கான ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை நாங்கள் உருவாக்கி உள்ளோம் என்றும் அவர் அப்போது கூறினார்.

நேற்று கேரள மாநிலத்தில் உள்ள இளைஞர்களை கொரோனா படையில் சேர அழைப்பு விடுத்து அந்த மாநில சுகாதார மந்திரி கே.கே. ஷைலஜா ஒரு வீடியோ பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கேரளாவில் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கலாம் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர். தினமும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்படலாம்.

கொரோனா வைரஸ் பரவலை தடுத்து நிறுத்துவதற்கு கொரோனா படையில் இளைஞர்கள் சேரவேண்டும்.

கேரளாவில் தொற்று பரவல் அதிகரிக்கிறபோது, இறப்புவீதமும் அதிகரிக்கும்.

கொரோனா உறுதி செய்யப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறபோது, இறப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே தொற்று பாதிப்பு அதிகரிப்பதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தொற்று பரவல் சங்கிலியை தகர்க்க அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். கையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

நமது கொரோனா படை உலகுக்கு முன் மாதிரியாக அமையும். ஆயிரக்கணக்கான சுகாதார பணியாளர்கள் மற்றும் பிற பணியாளர்கள் தொற்று நோயை எதிர்த்து போராடுகிறார்கள்.

இதில் அதிகளவிலான தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள். மருத்துவ மற்றும் மருத்துவம் சாராத தன்னார்வலர்கள் இதில் சேர்ந்து தொற்றுநோயை எதிர்த்து போரிட முன் வரவேண்டும்.

நவீன மருத்துவர்கள், ஆயுர்வேத, ஓமியோபதி, பல் மருத்துவர்கள், ஆய்வக தொழில்நுட்பவியலாளர்கள், மருந்தாளுனர்கள், செவிலியர்கள் இந்தப் படையில் சேரலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News