செய்திகள்
படப்பை அருகே என்ஜினீயர்களை தாக்கி செல்போன்கள், ஏ.டி.எம். கார்டுகள் பறித்த 4 பேர் கைது
படப்பை அருகே என்ஜினீயர்களை தாக்கி செல்போன்கள் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த புதுப்பேர் இந்திரா நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). சென்னை தேனாம்பேட்டை ராஜா நாயக்கன்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (37). சிவில் என்ஜினீயர்களான இவர்கள் இருவரும் படப்பையை அடுத்த வரதராஜபுரம் ராயப்பா நகரில் கட்டிட பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் முடிச்சூர் பகுதியில் உள்ள ஓட்டலுக்கு டிபன் சாப்பிட சென்றுவிட்டு திரும்பி ராயப்பா நகர் சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் அவர்களுடைய மோட்டார் சைக்கிளில் இடித்தனர். இதனை தட்டிக்கேட்ட சுரேசை கையால் தாக்கியதுடன், கத்தியால் வெட்டினர். பார்த்தசாரதிக்கும் லேசான வெட்டு விழுந்தது. சுரேஷ் மற்றும் பார்த்தசாரதி இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சககட்டிட தொழிலாளர்கள் தடுத்தனர். அதில் சேட்டு என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் 4 பேரும் சுரேசிடம் இருந்த செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டுகள், பார்த்தசாரதியிடம் இருந்த செல்போனை பறித்துச்சென்றுவிட்டனர். இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போரூர் மதனந்தபுரத்தை சேர்ந்த ஆகாஷ் (27), சென்னை பெரம்பூரை சேர்ந்த தீனா (25), கூடுவாஞ்சேரியை சேர்ந்த நீலகண்டன் (23), மாங்காடு பகுதியை சேர்ந்த முருகேசன் (23) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் கத்தி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.