செய்திகள்
கோப்புபடம்

கொரோனாவுக்கு பலியானவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2020-08-12 16:37 GMT   |   Update On 2020-08-12 16:37 GMT
மயிலாடுதுறை அருகே கொரோனாவுக்கு பலியானவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குத்தாலம்:

மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியை சேர்ந்த 54 வயதான ஒருவர், கடந்த 4-ந் தேதி கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து இறந்தவரின் உடலை அவரது சொந்த ஊரான மயிலாடுதுறை சித்தர்காட்டிற்கு கொண்டு சென்றனர். சித்தர்காடு காவிரிக்கரையில் உள்ள சுடுகாட்டில் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில், போலீசார் பாதுகாப்புடன் சுகாதாரத்துறை ஊழியர்கள் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய குழி தோண்டினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அருகே உள்ள இந்திரா காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் கொரோனோ பாதித்தவரின் உடலை அடக்கம் செய்யக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் எதிர்ப்பு தெரிவித்த அந்த பகுதி மக்களிடம் கொரோனா பாதித்த வரை சுகாதார முறைப்படி புதைப்பதால் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை என தெரிவித்தனர். ஆனால் அதை ஏற்க பொதுமக்கள் மறுத்தனர். இதனையடுத்து அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது பொதுமக்கள் போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆனாலும் சுடுகாட்டில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடல் சுகாதார முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
Tags:    

Similar News