செய்திகள்
தரங்கம்பாடி அருகே புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் தீயில் எரிந்த பைபர் படகு

ரூ.3 லட்சம் பைபர் படகு, என்ஜின்-வலைகள் தீயில் எரிந்து நாசம் - போலீசார் விசாரணை

Published On 2020-08-11 14:06 IST   |   Update On 2020-08-11 14:06:00 IST
தரங்கம்பாடி அருகே ரூ.3 லட்சம் மதிப்புடைய பைபர் படகு, என்ஜின் மற்றும் வலைகள் தீயில் எரிந்து நாசமாயின.
பொறையாறு:

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள மாணிக்கப்பங்கு ஊராட்சி புதுப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் (வயது31), செல்லச்செட்டி(42) ஆகியோர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பக்கத்து கிராமமான தாழம்பேட்டையில் பயன்படுத்தப்பட்ட பைபர் படகை ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கு வாங்கி வந்து மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

கடந்த சில நாட்களாக மீன்பிடி தொழிலுக்கு செல்லாததால் புதுப்பேட்டை கடற்கரையோரம் அந்த பைபர் படகை நிறுத்தி வைத்திருந்தனர். நேற்று காலை மீனவர்கள் இருவரும் கடலுக்கு வந்து பார்த்தபோது பைபர் படகு மற்றும் அதில் இருந்த வலைகள், என்ஜின் உள்ளிட்டவை தீயில் எரிந்த நிலையில் காட்சி அளித்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக பொறையாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு யுவபிரியா, பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பைபர் படகிற்கு மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எரிந்த பைபர் படகு, வலை மற்றும் என்ஜின் உள்ளிட்டவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. பைபர் படகு மீனவர்களுக்கும், சுருக்குமடி வலையை பயன்படுத்தும் விசைப்படகு மீனவர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை நிலவி வரும் நிலையில் புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் பைபர் படகு தீயில் எரிந்து கிடந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News