செய்திகள்
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

கவர்னர் கிரண்பேடிக்கு கடவுள் பாடம் கற்பிப்பார்- அமைச்சர் ஆவேசம்

Published On 2020-08-11 07:25 GMT   |   Update On 2020-08-11 07:25 GMT
கவர்னர் கிரண்பேடிக்கு கடவுள் பாடம் கற்பிப்பார் என்று புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.
புதுச்சேரி:

புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குறைபாடுகள் இருப்பதாக வந்த புகார்கள் தொடர்பாக நானே நேரில் சென்று 2 நாட்கள் ஆய்வு நடத்தினேன். நோயாளிகள் சொன்ன குறைகள் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தற்போது சாப்பாட்டிற்காக ரூ.230 செலவு செய்கிறோம். அதை ரூ.300 ஆக உயர்த்த முதல்-அமைச்சரிடம் கேட்டுள்ளேன். அவரும் அதை ஒப்புக்கொண்டுள்ளார். ஏனாமில் நோயாளிகளின் சாப்பாட்டிற்காக ரூ.225தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள நோயாளிகளுக்கு அசைவ உணவுகள் தன்னார்வல தொண்டு நிறுவன செலவில்தான் வழங்கப்படுகிறது. அங்கு கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அரசு சார்பில் எந்த உதவியும் இதுவரை வழங்கப்படவில்லை.

புதுவையிலும் நோயாளிகளுக்கு கூடுதல் உணவு வகைகளை வழங்க கூறியுள்ளேன். விரைவில் அதற்கான ஏற்பாடு செய்யப்படும். இந்த காலகட்டத்தில் சுகாதார பணியாளர்கள் மீது யாரும் குறை சொல்ல வேண்டாம். அப்படி செய்தால் பணியில் அவர்களுக்கு சலிப்பு ஏற்படும்.

சண்டே மார்க்கெட்டில் தமிழக பகுதியில் இருந்து வந்தவர்கள் கடைபோட்டதாக புகார்கள் வருகிறது. நாளை பேரிடர் மேலாண்மைகுழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வாரம் 2 நாட்கள் முழு ஊரடங்கு போட வலியுறுத்துவேன்.

மத்திய அரசு வழங்கிய இலவச அரிசியை நம்மால் இப்போது மக்களுக்கு கொடுக்க முடியவில்லை. அந்த அரிசியை ஆசிரியர்களை வைத்து கொடுக்க கவர்னர் உத்தரவிடுகிறார். அப்படி கொடுத்தால் அரிசி வழங்க 2 மாதங்கள் ஆகும். ரேஷன்கடைகள் மூலம் வழங்கினால் 5 நாட்களில் கொடுத்துவிடலாம்.

இந்த விவகாரத்தையும் கவர்னர் கிரண்பேடி மத்திய அரசுக்கு கொண்டு சென்றுள்ளார். முதல்-அமைச்சரும் உள்துறை செயலாளரிடம் பேசி உள்ளார். கவர்னர் தனக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று செயல்படுகிறார். அவர் மீண்டும் தவறு செய்யவேண்டாம்.

கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரியில் இருக்கும் நோயாளிகளிடம் இருந்து புகார் வந்தபோது கவர்னர் ஏன் அங்கு செல்லவில்லை. முன்பு சைக்கிளில் ஆய்வுக்கு சென்றவர் இப்போது செல்ல வேண்டியதுதானே? அவர் முன்பு நடத்திய நாடகத்தை இப்போது நடத்த வேண்டியதுதானே? கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்தால்தான் உண்மையான ஹீரோ.

தவறான முடிவுகள் எடுக்கும் கவர்னர் கிரண்பேடிக்கு கடவுள் பாடம் கற்பிப்பார். நோயாளிகளை காப்பாற்ற போராடுபவர்களுக்கு நல்லது செய்யுங்கள். இல்லாவிட்டால் கடந்த 3 மாதமாக தூங்கியதுபோல் இப்போதும் தூங்குங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News