செய்திகள்
சிதம்பரம் அருகே பள்ளி மாணவர்களுடன், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

சிதம்பரம் அருகே கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டி தரக்கோரி பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-08-06 13:48 GMT   |   Update On 2020-08-06 13:48 GMT
சிதம்பரம் அருகே கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டி தரக்கோரி பள்ளி மாணவர்களுடன், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம்:

சிதம்பரம் அருகே நக்கரவந்தன்குடி ஊராட்சி கோழிப்பள்ளம் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் குமராமங்கலம், நடராஜபுரம், கணக்கரப்பட்டு, உத்தமசோழமங்கலம், ராதாவிளாகம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 66 மாணவ-மாணவிகள் வந்து கல்வி பயின்று வருகின்றனர். 3 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளி ஆங்கிலவழி கல்வியை பயிற்றுவிக்கும் பள்ளியாகவும் உள்ளது.

1926-ம் ஆண்டு கட்டப்பட்ட இப்பள்ளி கட்டிடம், மிகவும் சேதமடைந்து காணப்பட்டதால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. அதன் பிறகு ஒரே ஒரு அறை கொண்ட கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டது. அந்த அறையில் மாணவர்கள் அனைவரும் இருக்க போதிய இடவசதி இல்லை. பெரும் இடநெருக்கடிக்கு மத்தியில் கல்வி பயின்று வந்தனர்.

மேலும் மழைக்காலங்களில் அந்த வகுப்பறைக்குள் தண்ணீர் புகுவதாகவும் கூறப்படுகிறது. தற்போது 3 வகுப்புகள் வரையுள்ள மாணவர்கள், பஞ்சாயத்து யூனியன் கட்டிடமான அங்கன்வாடி மையத்தில் அமர்ந்து படித்து வந்தனர். இதனால் மாணவர்களின் பெற்றோர், கூடுதல் கட்டிடம் கட்டி தரக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர். 

ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி செயல்படவில்லை. இருப்பினும் கொரோனா ஊரடங்கு முடிந்து பள்ளி திறக்கப்பட்டால், மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாமல், கடும் இடநெருக்கடிக்கு மத்தியில் நெருக்கமாக அமர்ந்து படிக்க வேண்டிய நிலை ஏற்படும்.இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மாணவர்களுடன் சேர்ந்து நேற்று காலை பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்கள், பள்ளிக்கூடத்துக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் எனவும், இதுவரை நடவடிக்கை எடுக்காத ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளை கண்டித்தும் கோஷங் களை எழுப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News