செய்திகள்
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

கொரோனா தொற்று அதிகரிப்பு : ஊட்டியில் 700 படுக்கை வசதிகள் தயார் - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

Published On 2020-07-15 09:39 GMT   |   Update On 2020-07-15 09:39 GMT
கொரோனா தொற்று அதிகரிப்பதால் ஊட்டியில் 700 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சில இடங்கள் கிளஸ்டர் ஆக உள்ளது. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள், தொழிலாளர்கள் என 111 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. அதனை தொடர்ந்து 2 திருமண நிகழ்ச்சிகள், ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நபர்களுக்கு பாதிப்பு உறுதியாகி வருகிறது. நிகழ்ச்சிகளில் தொற்று பாதித்தவர்கள் கலந்துகொண்டதால் நோய் பரவும் பகுதியாக (கிளஸ்டர்) கிராமங்கள் உருவாகி இருக்கிறது. நிகழ்ச்சிகளுக்கு வந்து சென்ற 11 கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

அறிகுறி தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு, நீலகிரி மாவட்டம் நீண்ட நாட்களாக பச்சை மண்டலத்துக்குள் இருந்தது. தற்போது பாதிப்பு 200 -ஐ கடந்து உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கருத்தில் கொள்ளாமல், அரசின் வழிமுறைகளை கடைபிடிக்காமல் பெயர் சூட்டுவது, காது குத்துவது போன்ற நிகழ்ச்சிகளை மக்கள் வழக்கம்போல் நடந்துகின்றனர். தொற்று உறுதியானவர்கள் மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். தேவையில்லாமல் நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதார குழுவினர் கண்டறிந்து பரிசோதனை நடத்துகிறார்கள். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் உருவாக்கப்பட்டு உள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஊட்டியில் 120 படுக்கை வசதிகளுடன் தனியார் பள்ளி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. வருகிற நாட்களில் பாதிப்பு அதிகரிக்கக் கூடும் என்பதால் 700 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் ஊட்டி, குன்னூர், கூடலூரில் போதுமான படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா சிகிச்சை மையத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டு அறிகுறி இல்லாதவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு சுழற்சி முறையில் டாக்டர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். நோயாளிகளுக்கு மூன்று வேளையும் நல்ல உணவு, அரசு வழிமுறைப்படி சித்த மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News