செய்திகள்
தொற்று இல்லாத பெண்ணை கொரோனா வார்டுக்கு அழைத்துச்சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

கறம்பக்குடியில், தொற்று இல்லாத பெண்ணை கொரோனா வார்டுக்கு அழைத்துச்சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

Published On 2020-07-13 19:20 IST   |   Update On 2020-07-13 19:20:00 IST
கறம்பக்குடியில் தொற்று இல்லாத பெண்ணை கொரோனா வார்டுக்கு அழைத்துச்சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள், நள்ளிரவில் அவரை திருப்பி அனுப்பினர்.
கறம்பக்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கச்சேரி வீதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடைய குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் அவருடைய மனைவி, மகன், மகளுக்கும் தொற்று உறுதியானது.

இதையடுத்து அவர்களை நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்தனர். அப்போது நகைக்கடை உரிமையாளரின் மருமகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி, அந்த பெண்ணையும் ஆம்புலன்சில் ஏற்றி புதுக்கோட்டைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவமனைக்கு சென்ற பின்னர், தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் பட்டியலை சரி பார்த்தபோது, நகைக்கடை உரிமையாளரின் மருமகளுக்கு தொற்று இல்லாத நிலையில், அவரை அழைத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை நள்ளிரவில் ஊருக்கு திரும்பி செல்லுமாறு ஊழியர்கள் அனுப்பிவிட்டனர்.

பஸ் இல்லாத நிலையில் புதுக்கோட்டையில் தவித்த அந்த பெண், பின்னர் உறவினருக்கு தகவல் தெரிவித்து கார் ஏற்பாடு செய்து, அதில் ஊருக்கு திரும்பினார். தொற்று இல்லாத பெண்ணை, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் ஒரே ஆம்புலன்சில் அழைத்து சென்றது கறம்பக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News