செய்திகள்
சாலைகள் வெறிச்சோடின

கறம்பக்குடியில் முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு

Published On 2020-07-11 10:16 GMT   |   Update On 2020-07-11 11:05 GMT
கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கறம்பக்குடி பகுதியில் மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டிருந்தன.
கறம்பக்குடி:

கறம்பக்குடி பகுதியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலருக்கு தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து பேரூராட்சி பகுதியில் 3 வீதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டன. மேலும் கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கறம்பக்குடி பகதியில் மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதற்கிடையே திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். கிராம பகுதிகளில் இருந்து கறம்பக்குடிக்கு பொருட்கள் வாங்க வந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். இதேபோல் பூக்கள், காய்கறிகள் போன்றவற்றை விற்பனை செய்ய கடைகளுக்கு கொண்டு வந்த விவசாயிகளும் பாதிப்பு உள்ளாகினர். மேலும் இந்த ஊரடங்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக சிறு வியாபாரிகள் பலர் சங்க நிர்வாகிகளிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இதற்கிடையே கறம்பக்குடி பகுதியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டு செயல்பட்டதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். அதேநேரத்தில் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். வெளியே சென்றவர்களை போலீசார் மறித்து விசாரித்தபோதும், டாஸ்மாக் கடைக்கு செல்வதாக அவர்கள் கூறிச்சென்றனர்.

இதேபோல் ஆவுடையார்கோவில் அருகே ஒக்கூர் கிராமத்திலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் பொதுமக்கள், ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து உள்ளூரில் உள்ள கடைகளுக்கு நேற்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அளித்து, ஊரின் முக்கிய எல்லைகளை அடைத்து முழு ஊரடங்கை பின்பற்றியுள்ளனர். மேலும் அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பல பகுதிகளில் ஊரின் எல்லைகள் கட்டைகள், முள்வேலிகள் மூலம் அடைக்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News