செய்திகள்
இளம்பெண் மர்மமரணம்

உத்திரமேரூரில் திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் மர்மமரணம்

Published On 2020-07-10 14:42 IST   |   Update On 2020-07-10 14:42:00 IST
உத்திரமேரூரில் திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் மர்மமரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:

உத்திரமேரூர் திருவேங்கடம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவர் உத்திரமேரூர் தீயணைப்புத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி. இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் மகளிர் சங்க தலைவியாக உள்ளார்.

இவர்களுடைய மகள் செந்தாரகை (வயது 23). பட்டதாரியான இவருக்கும், உத்திரமேரூர் நரசிம்மநகரை சேர்ந்த தனியார் பெயிண்டு கம்பெனியில் வேலை பார்க்கும் யுவராஜ் (27) என்பவருக்கும் ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

செந்தாரகை திருமணத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 வாரத்துக்கு முன்னர் தனது தாய்வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் குளியலறைக்கு சென்ற செந்தாரகை நீண்ட நேரமாக வெளியே வரவில்லை.

கதவை உடைத்து பார்த்ததில் செந்தாரகை குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்தது தெரியவந்தது

ஆனால் செந்தாரகை சாவில் மர்மம் இருப்பதாக உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் செந்தாரகை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி ஒரு மாதமே ஆனதால் காஞ்சிபுரம் சப்-கலெக்டர் சரவணன் விசாரணை மேற்கொண்டார். பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Similar News