செய்திகள்
அசாருதீன்

நாகூர் அருகே வாலிபர் கொலை- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Published On 2020-07-08 14:49 IST   |   Update On 2020-07-08 14:49:00 IST
நாகூர் அருகே கத்தியால் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நாகூர்:

நாகை மாவட்டம் மேலவாஞ்சூர் அருகே பனங்குடி அரிசி சேமிப்பு கிடங்கின் பின் பகுதியில் கருவேல மரக்காடு உள்ளது. இங்கு ஒருவர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதாக நாகூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் மற்றும் போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பிணமாக கிடந்தவர் மேலவாஞ்சூர் காமாகோடி நகரை சேர்ந்த பகுருதீன் மகன் அசாருதீன் (வயது 19) என்பதும், மர்ம நபர்களால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. கேரளாவில் ஓட்டலில் வேலை பார்த்து வந்த இவர், ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் விளையாட சென்ற அசாருதீன், இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு கருவேல மரக்காட்டில் பிணமாக கிடந்தது பெற்றோர் மற்றும் உறவினர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

இதுபற்றி தகவல் அறிந்த அசாருதீன் தாய் பாத்திமாபீவி, அசாருதீன் பிணமாக கிடந்த பகுதிக்கு சென்று உடலை பார்த்து கதறி அழுதார். அவரை உறவினர்கள் சமாதானம் செய்தனர்.

இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசாருதீனை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாகூர் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News