செய்திகள்
போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் முழு முகக்கவசத்தை போலீஸ்காரர் ஒருவருக்கு வழங்கியபோது எடுத்த படம்.

கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 500 போலீசாருக்கு முழு முகக்கவசம்

Published On 2020-06-28 13:35 IST   |   Update On 2020-06-28 13:35:00 IST
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 500 போலீசாருக்கு முழு முகக் கவசத்தை போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் வழங்கினார்.
வேலூர்:

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர், மருத்துவத்துறையினர், காவல்துறையினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

சென்னை மாம்பலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய வேலூரை சேர்ந்த பாலமுரளி என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானார். அதைத்தொடர்ந்து போலீசாரை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபடும் 500 போலீசாருக்கு முழு முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தலைமை தாங்கி, போலீசாருக்கு முழு முகக்கவசம் வழங்கி பேசினார்.

அப்போது அவர், மருத்துவமனைகளில் கொரோனா தொற்று வார்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார், சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார், வாகனத் தணிக்கையில் ஈடுபடும் போலீசார் கட்டாயம் முழு முகக் கவசம் அணிய வேண்டும், என்றார். அதைத்தொடர்ந்து 500 போலீசாருக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் போலீசாருக்கும் விரைவில் முழு முகக் கவசங்கள் வழங்கப்பட உள்ளன. இதை, அணியாமல் பணியில் ஈடுபடும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும், எனப் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார். நிகழ்ச்சியில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News