செய்திகள்
கைது

கரூரை சேர்ந்த பிரபல கார் திருடன் கைது - 17 வாகனங்கள் பறிமுதல்

Published On 2020-06-18 21:39 IST   |   Update On 2020-06-18 21:39:00 IST
கரூரை சேர்ந்த பிரபல கார் திருடனை திண்டுக்கல் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டுக்கல்:

திண்டுக்கல் நேருஜிநகர் பகுதியில் கடந்த மாதம் கார் ஒன்று திருடு போனது. இது குறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் விசாரித்து வந்தனர். ஆனால், கார் திருடன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே ஒட்டன்சத்திரத்திலும் கார் ஒன்று திருடு போனது. இந்த 2 திருட்டு சம்பவங்களும் ஒரே மாதிரி நடந்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து திண்டுக்கல் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், அழகர்சாமி, சேக்தாவூது, வீரபாண்டி மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படையினர் விசாரணையில் இறங்கினர். திருட்டு சம்பவங்கள் நடந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள், செயல்பாட்டில் இருந்த செல்போன் எண்கள் ஆகியவற்றை கொண்டு விசாரித்தனர்.

அதில் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பஞ்சம்பட்டியை சேர்ந்த சுரேஷ் (வயது 45) என்பவர் கார்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை, தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மட்டுமின்றி கரூர், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் சுரேஷ் கார்கள், லாரிகள், மோட்டார்சைக்கிள்களை திருடி விற்றது தெரியவந்தது.

அது தொடர்பாக அந்தந்த பகுதிகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதைத் தொடர்ந்து அவர் பல்வேறு பகுதிகளில் திருடிய 5 கார்கள், 7 லாரிகள், 4 மோட்டார்சைக்கிள்கள், 1 வேன் என மொத்தம் 17 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சுரேசுக்கு உதவியதாக திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த விஜயகுமார் என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

Similar News