செய்திகள்
ஆலோசனை கூட்டம் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் தலைமையில் நடைபெற்றபோது எடுத்தபடம்.

விருதுநகர் கிராம பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க நடவடிக்கை

Published On 2020-06-18 15:14 IST   |   Update On 2020-06-18 15:14:00 IST
விருதுநகர் யூனியன் பகுதியில் உள்ள கிராமப்பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை சமாளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் யூனியன் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர்:

விருதுநகர் யூனியன் பகுதியில் கிராம பஞ்சாயத்துக்களில் கோடைக்கால குடிநீர் பிரச்சினைகளை சமாளிப்பதற்காக ஆலோசனை கூட்டம் யூனியன் தலைவர் சுமதிராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் முத்துலட்சுமி தர்மலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராஜசேகர் மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் யூனியன் தலைவர் சுமதிராஜசேகர் பேசும்போது, கிராமப்பகுதிகளில் தமிழக அரசின் நடவடிக்கையால் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பிற கிராமப்பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும் நிலையில் நீர்ஆதார வறட்சி, குழாய் உடைப்பு, மின்மோட்டார் பழுது ஆகியவற்றால் குடிநீர் வினியோகத்தில் பிரச்சினை ஏற்பட்டு இருந்தால் அவற்றுக்கு தீர்வுகாண உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினார். இது பற்றி தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கைக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம பஞ்சாயத்து தலைவர்கள் தங்கள் கிராமப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் நடைமுறைகள் குறித்தும், அதில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக எடுத்து கூறினர்.

இதனை கேட்ட யூனியன் தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கள் கிராமப்பகுதிகளில் தடையில்லாத குடிநீர் வினியோகம் செய்யப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுத்து பஞ்சாயத்து தலைவர்கள் அதனை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். தங்களுக்கு தேவைப்படும் உதவிகள் குறித்தும் உடனடியாக தெரிவிக்குமாறும் அவர்களை கேட்டுக்கொண்டனர். 

Similar News