செய்திகள்
கைது

கிணற்றில் தள்ளி விவசாயி கொலை- சித்தப்பா மகன் கைது

Published On 2020-06-18 09:05 GMT   |   Update On 2020-06-18 09:05 GMT
மதுரை மாவட்டம் வில்லூர் அருகே முன்விரோதத்தில் விவசாயியை கிணற்றில் தள்ளி கொலை செய்த சித்தப்பா மகன் கைது செய்யப்பட்டார்.
பேரையூர்:

மதுரை மாவட்டம் வில்லூர் அருகே உள்ள உவரியை சேர்ந்தவர் திரிசங்குராமன் (வயது 35). விவசாயி. இவரது மனைவி சாலைஈஸ்வரி. திரிசங்குராமனுக்கும், அவரது சித்தப்பா மகன் சங்கரேஸ்வரனுக்கும்(45) பொது கிணற்றில் தண்ணீர் பாய்ச்சுவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள கிணற்றில் திரிசங்குராமன் இறந்து பிணமாக கிடந்தார். இதுகுறித்து சாலைஈஸ்வரி, தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக வில்லூர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சங்கரேஸ்வரனை தேடி வந்தனர்.போலீசார் தேடி வருவதை அறிந்து சங்கரேஸ்வரன் தலைமறைவானார்.

இந்தநிலையில் சங்கரேஸ்வரன் வில்லூர் கிராம நிர்வாக அலுவலர் முகம்மது தாவுத்திடம் நேற்று சரண் அடைந்தார். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், எனக்கும், திரிசங்குராமனுக்கும் கிணற்றில் தண்ணீர் பாய்ச்சுவது சம்பந்தமாக தகராறு இருந்தது. சம்பவத்தன்று திரிசங்குராமனை நைசாக பேசி வரவழைத்து 2 பேரும் அங்குள்ள கிணற்று அருகில் வைத்து மது அருந்தினோம்.

திரிசங்குராமனுக்கு அதிகமாக மதுவை ஊற்றி கொடுத்து போதை ஏறியவுடன் அவரை கிணற்றில் தள்ளி விட்டேன். மறுநாள் அவர் இறந்தது தெரிந்தவுடன் ஊரில் இருந்து தலைமறைவாகி விட்டேன் என்றார். இதைதொடர்ந்து வில்லூர் போலீசார், சங்கேரஸ்வரனை கைது செய்தனர்.
Tags:    

Similar News