செய்திகள்
கொரோனா வைரஸ்

சென்னை, பெங்களூருவில் இருந்து தர்மபுரிக்கு வந்த 11 பேருக்கு கொரோனா

Published On 2020-06-18 13:10 IST   |   Update On 2020-06-18 13:10:00 IST
சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வந்த தந்தை-மகன் உள்பட 11 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பொய்யப்பட்டியை சேர்ந்த 45 வயது நபர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் தனது 13 வயது மகன் மற்றும் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்தார். இவர்களை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி சோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போது தந்தை-மகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதேபோல் பாலக்கோடு அருகே உள்ள சாமனூர் கிராமத்தை சேர்ந்த 23 வயது லாரி டிரைவர் பெங்களூருவில் இருந்து தர்மபுரி வந்தார். இவருக்கும் மருத்துவ பரிசோதனையில் கொரோனா கண்டறியப்பட்டது. பென்னாகரம் அருகே உள்ள எம்.தண்டா பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர் மற்றும் 17 வயது சிறுவன், மொரப்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 24 வயது தனியார் நிறுவன ஊழியர் ஆகியோர் சென்னையில் இருந்து தர்மபுரி வந்தனர். இவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதேபோல் நல்லம்பள்ளியை சேர்ந்த 48 வயது பெண் மற்றும் தர்மபுரி குமாரசாமிப்பேட்டை பகுதியை சேர்ந்த 51 வயது பெண், தர்மபுரி இலக்கியம்பட்டி விஜய்நகர் பகுதியை சேர்ந்த 36 வயது தனியார் நிறுவன ஊழியர், அரசு துறையில் உதவி பொறியாளராக பணிபுரியும் தர்மபுரி நகரை சேர்ந்த 39 வயதான நபர் ஆகியோர் சென்னையில் இருந்து தர்மபுரி வந்தனர். சுகாதாரத்துறையினர் நடத்திய பரிசோதனையில் இவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதேபோல் பெரும்பாலையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கர்நாடக மாநிலம் ராம்நகரில் இருந்து பெங்களூரு வழியாக தர்மபுரி மாவட்டத்திற்கு வந்தனர். இவர்களுடைய 2 வயது பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. தர்மபுரி மாவட்டத்திற்கு வந்த 11 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட சம்பவம் மாவட்ட மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த 11 பேரும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Similar News